செவ்வாய், 9 மே, 2017

படுத்தவுடன் தூக்கம் வர…….

லருக்கும் படுத்தவுடன் தூக்கம் என்பது பெரும் கனவாகிப்போனது என்று தான் சொல்ல வேண்டும். வேலைப்பளு, மன உளைச்சல் என பல காரணங்களால் தூக்கம் தொலைத்தவர்கள் ஏராளம்.

சிலருக்கோ கனவில் ஏதாவது தொல்லை நேர்வது, ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் என பல உண்டு. ஆனால் படுத்தவுடன் அடுத்த நாள் காலை வரை எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வேண்டுமானால் அதற்கும் சில வழிகள் உண்டு. அவற்றை முறையாகப் பின்பற்றினாலே போதும். உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

அதிலும் நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். அந்த நேரத்திலும் குறட்டை போன்ற எந்த பிரச்னையும் உண்டாகாமல் தூங்க வேண்டுமானால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

‘நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம் வரும். குறைவாக சுரக்கும்போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனோ நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும்போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும் சுரக்கும்.

பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து வேலை செய்கிறவர் களுக்கு அடுத்த இரண்டு மணி நேரம் வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தை களுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் டி.வி&யை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.


தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:


காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றி லுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.
தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் குளியுங்கள். அதிலும் குறிப்பாக, நல்ல நறுமணம் வீசக்கூடிய ஏதேனும் வாசனை திரவியத்தை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்தலாம். அந்த குளியல் ஆனந்தத்தையும் புத்துணர்வையும் தருவதோடு நல்ல நிம்மதியான தூக்கத்தையும் தரும்.

சுத்தமான, உங்கள் வசதிக்கு ஏற்றபடியான நல்ல மெத்தை விரிப்புகள், தலையணைகள் அவசியம். அதேபோல் வீட்டில் தானே இருக்கிறோம் என்று நினைக்காமல் நல்ல சுத்தமான. ஆடைகளை அணிந்து கொள்வது அவசியம்.

படுக்கையில் விரிப்பதற்காகப் பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள் மென்மையான லைட் கலரில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

குளிப்பாக பிளாக்,பிரௌன் கலர் விரிப்புகளைப் பயன்படுத்தாதீர்கள். அந்த நிறங்கள் அதிக மனஅழுத்தத்தை உண்டாக்கும்.

உங்கள் அருகில் யாரும் படுத்துத் தூங்கவில்லை, நீங்கள் தனியாகத் தூங்குகிறீர்கள் என்றால் உங்களுடன் மிக மென்மையான பொம்மைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம். அது உங்கள் மனதுக்கு மிகுந்த இதமளிக்கும்.

சில சமயங்களில் நம்முடைய தலையணைகளே நம் தூக்கத்தைக் கெடுக்கும். ஆதலால் தலையணை பட்டுபோல், இறகைப் போல மென்மையானதாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு மிகப் பிடித்த ரூம் ஸ்பிரே பயன்படுத்துங்கள். நீங்களும் உங்களுக்குப் பிடித்த மென்மையான செண்ட் அடித்துக் கொள்ளுங்கள்.

தனியாகத் தூங்குபவரென்றால் மிக மென்மையாக இருக்கும்படியான மெல்லிசையைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்லும்.’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Disqus Shortname